மார்கழியின் சிறப்புகள் நாள் 1
தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதம் மார்கழி. குளிர் காலத்தின் ஆரம்பம் மார்கழி. இந்த மார்கழியில் சூரியனுடைய இயக்கம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் மாதமாகும். இந்த சூரியனின் ஓட்டத்தில் மாற்றம் நிகழும் பொழுது வெப்ப நிலையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.
மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி. ஸ்ரீகிருஷ்ணனே மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கீதையில் மார்கழி மாதத்தை தேவ மாதம் என்றும் குறிப்பிடுகிறார்கள். பீடு நிறைந்த மாதம் மார்கழி.
மார்கழி மாதம் முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாக கொண்டாள். மார்கழியில் ஆலயங்களில் விடியற்காலையிலேயே வழிபாடுகள் தொடங்கிவிடும். திருப்பள்ளிஎழுச்சி பூஜைகளும் விடியற்காலையிலேயே தொடங்கிவிடும். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கிய விசேஷங்களில் ஒன்று.
மார்கழி மாதத்தில் விடியற்காலையில் காற்றில் ஓசோனின் அளவு அதிகமாக இருக்கும். அந்த தூய்மையான காற்றை சுவாசிக்கும் பொழுது நம் ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே தான் மார்கழியில் பெண்கள் காலையில் கோலமிட்டு பின் கடவுளை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
மார்கழி மாதத்தில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவது வழக்கம்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே “திருப்பாவை” என்று அழைக்கப்படுகிறது.
திருப்பாவை
பாடல் 1) மார்கழித் திங்கள்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். 20 பாடல்களிலும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் பாடல் முடிவடைகிறது….
திருவெம்பாவை பாடல் 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment