Thursday, 18 August 2022

தலைவலியில் இத்தனை வகைகளா? - 1

தலைவலி




        தலைவலி என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். மித வலியிலிருந்து தாங்க முடியாத அளவு வலி என வலியிலும் பல நிலைகள் உண்டு.  ஓருவருக்கு மாதத்திற்கு எத்தனை முறை தலைவலி வருகிறது என்பதைப் பொருத்து,  குறுகிய கால தலைவலி, நாள்பட்ட தலைவலி என வகைப்படுத்தப்படுகிறது.

1.குறுகிய கால தலைவலி :
    

        ஒரு   மாதத்தில் 15 நாட்களுக்கு குறைவாக அடிக்கடி ஏற்படும் தலைவலி அரை மணி நேரம் தொடங்கி பல மணி நேரத்திற்கு நீடிக்கும்.


2. நாள்பட்ட தலைவலி :

            ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மேல்  ஏற்படும் தலைவலி   தொடர்ச்சியாக  இருந்து கொண்டே இருக்கும்.




    தலைவலியில் பல வகைகள் உண்டு. முதன்மை வகைகள் பின்வருவன:


அதீத பதட்டத்தால் தலைவலி :


    அதீத பதட்டத்தால் தலைவலி எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக மனஉளைச்சலினால் ஏற்படுகிறது. இந்த தலைவலி இருந்தால் சோர்வும், தலை முழுவதும் வலியும்  உண்டாகும். கழுத்து, நெற்றி மற்றும் தோள் தசைகளில் வலி உண்டாகும். 

இதை சரிப்படுத்த : பதட்டம் கொள்ளக்கூடாது. மனஉளைச்சலை சரியாக கையாள வேண்டும்.




கொத்து தலைவலி :


    கொத்து தலைவலி என்பது எரிச்சலுடன் கூடிய தலைவலியாகும். இது ஒரு கண் அல்லது முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் உருவாகும் வலியாகும். கண் வீக்கம் , விழி முழுவதும் சிகப்பு நிறமாக மாறுதல், அதிக வியர்வை, மூக்கடைப்பு ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். 

    கொத்து தலைவலி 15 நிமிடம் முதல் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு நாளில் பல முறை ஏற்படும். ஒரு தடவை தலைவலி குறைந்தவுடன் அடுத்த தலைவலி ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக்கும். ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய ஒரு தலைவலியாகும். இந்த தலைவலி உருவாவதற்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.


ஒற்றை தலைவலி (மைக்ரேன்)


        ஒற்றை தலைவலி ஒரு நரம்பியல் நோயாகும். தலையின் ஒரு புறம் மட்டும் துடிக்கும் வலி தோன்றும். பல நாட்களுக்கு நீடிக்கும். அதிக வெளிச்சம் மற்றும் சத்தம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். குமட்டலும், வாந்தியும் பொதுவான அறிகுறிகள். சில பேருக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் பொழுது கண் குறைபாடுகளும் உருவாகும். 

        பெண்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். ஒற்றை தலைவலி உருவாவதற்கான காரணிகள் தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவது, சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளாமல் இருத்தல். ஹார்மோன் அளவின் மாற்றங்கள், சில உணவு வகைகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகியவையாகும்.

    இதை சரிப்படுத்த ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். சரியான நேரத்தில் உணவை சாப்பிட வேண்டும். நோயை உருவாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.


ஹெமிக்ரானியா தொடர் தலைவலி :      

    ஹெமிக்ரானியா தொடர் தலைவலி என்பது  மிதமான தலைவலி தலையின் ஒரு புறத்தில் மட்டும் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். ஒரு நாளின் சில நிமிடங்கள் மட்டும் தீவிரமான தலைவலி இருக்கும். இது பெண்களை அதிகமாக பாதிக்கும். 

        கண் எரிச்சல், மூக்கடைப்பு, நெற்றியில் அதிக வியர்வை சுரப்பது, அமைதியற்ற தண்மை ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். 


குத்துத் தலைவலி :

        குத்துத்தலைவலி  என்பது குறைந்த நேரத்தில் தீவிரமான தலைவலி ஏற்படும். இது சில நொடிகள் அல்லது நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். ஒரு நாளில் பல முறை உண்டாகும் இந்த தலைவலி எந்த வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.  ஒவ்வொரு முறையும் தலையின் வெவ்வேறு பகுதியில் தலைவலி உருவாகும்.


தண்டர் கிளாப் தலைவலி 


        தண்டர் கிளாப் தலைவலி என்பது இடி இடிப்பது போல் வலி தோன்றி ஒரு நிமிடத்தில் குறைந்து விடும். ஆனால் இந்த தலைவலி நீண்ட நேரம் இருந்தால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். 

    இந்த தலைவலி பக்கவாதம், மூளையில் உள்ள இரத்த நாளங்கள் பாதிப்படைதல் , மூளையில் அடிபடுதல்,  தண்டுவடத்தில் திரவம் கசிதல் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம். இந்த தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து  உடல்நிலை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.





            











     

No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...