Thursday 29 September 2022

உலக இருதய தினம் 29 செப்டம்பர், 2022

உலக இருதய தினம் 
29 செப்டம்பர், 2022



          உலகளவில் இதய நோய்கள் அதிக மரணம்  நேர்வதற்கான காரணமாக இருக்கிறது. 18.6 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் இதய நோய்களால் இறக்கிறார்கள்.  85 சதவீத இதயநோய்கள் இதய அடைப்பினாலும்,  பக்கவாதத்தினாலும்  ஏற்படுகிறது.  உலக இதய நிறுவனம்,  உலக நல நிறுவனத்துடன் சேர்ந்து உலக இதய தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  மாதம் 29-ஆம் தேதி கடைபிடிக்க செய்கிறது.

        இந்த தினம் இதய நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,  இதய நோயின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டின் கருப்பொருள் உங்கள் இதயங்களை பயன்படுத்துங்கள் - மக்களுக்காக, இயற்கைக்காக, உங்களுக்காக  ஒவ்வொரு இதயத்திற்கும் : இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிந்தனை செய்யுங்கள்


     உலக இதய தினம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பாகும்.  எப்படி சிறந்ததாக தங்களின் இதயத்தை மக்களுக்காகவும், இயற்கைக்காகவும்   தங்களுக்காகவும் பயன்படுத்த முடியும்? என்று சிந்திப்பதே ஆகும். இதய நோய்களை கட்டுப்படுத்துவது என்பது  துடிக்கும் எல்லா இதயங்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும். உங்கள் இதயங்களை  பயன்படுத்துங்கள். வித்தியாசமாக சிந்தியுங்கள். சரியான முடிவுகளை எடுங்கள். தைரியத்துடன் செயல்படுங்கள். அடுத்தவர்களுக்கு உதவுங்கள். நல்ல காரணங்களுக்காக செயல்படும் செயல்களில் ஈடுபடுங்கள். இதயம் மட்டுமே நம்மால் கேட்கவும் உணரவும் கூடிய ஒரு உறுப்பாகும். நம் வாழ்க்கையின் தொடக்கத்தையும், முடிவையும்  உணர்த்துவதே இதயம் ஆகும்.

 உபயோகியுங்கள் இதயத்தை மக்களுக்காக :

     இதய நோய்களுக்கான மருத்துவத்தைத் ஒவ்வொருவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். உலகில் 75% இதய நோய்கள்  பாதித்தவர்கள் இறப்பதற்கு  காரணம் அவர்களுக்கான சரியான மருத்துவ உதவி கிடைக்காததே ஆகும். ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு சிறிய மாற்றத்தை நாம் வாழும் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்துவோம்.

 இதயத்தை பயன்படுத்துங்கள் இயற்கைக்காக:

 காற்று மாசுபாட்டின் காரணமாக 25% இதய நோய்கள்  ஏற்படுகிறது. காரிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ  பயணம் செய்யாமல், நடந்தோ அல்லது  மிதிவண்டியிலோ  சென்றால்  காற்று மாசுபாட்டை குறைக்கலாம்.  அருகில் உள்ள இடங்களுக்கு எல்லாம் வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்வது காற்று மாசுபாட்டை குறைத்து,  நம்மாலான ஒரு ஆரோக்கியமான உலகை உருவாக்குவதற்கான வழியாகும்.

இதயத்தை பயன்படுத்துங்கள் உங்களுக்காக:

     மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம்  இதயத் நோயை உருவாக்குவதற்கான முக்கிய காரணமாகும். உடற்பயிற்சி, தியானம், நல்ல ஆரோக்கியமான உறக்கம், நல் உணவு ஆகியவை மன உளைச்சலை குறைப்பதற்கு பயன்படுகிறது. மன உளைச்சலால்  ஏற்படும் கெட்ட பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.


 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் :

சேர்க்க வேண்டியவை :

முழு தானியங்களை உணவில் சேருங்கள் 

    முழுதானியர்களை உணவில் சேர்த்து கொள்வதால் நம் இதய ஆரோக்கியம் மேம்படும். நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதில் உடலுக்கு தேவையான கார்போஹைடிரேடுடன் சேர்ந்து வைட்டமின் பி 1, பி 2, பி 9 மற்றும் பி 12 ஆகிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.


புரத உணவுகள்:

    பருப்பு வகைகளான கொண்டைக்கடலை, பட்டாணி காராமணி ஆகியவை புரதச்சத்து நிறைந்து இருப்பதால் நம் இதய ஆரோக்கியத்தை காக்கின்றன. குறைந்த கொழுப்பு கொண்ட பால் மற்றும் பால் பொருட்கள், மீன் வகைகள், முட்டை ஆகியவை புரதச்சத்து நிறைந்த உணவாகும்.


ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 

    ஒமேகா -3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகள், அலி விதை போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.


கீரை வகைகள் 

    கீரைகள் மற்றும் இலை காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இதய நோய்  குறையும். இதில் உள்ள நைட்ரேட்கள் இரத்த அணுக்களுக்கு ஆக்சிஜன் அதிகம் கிடைக்கவும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர் செய்யவும் உதவுகிறது.

 இதய ஆரோக்கியத்தை காப்பதற்கு நாம் தவிர்க்க வேண்டியவை 

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு சேர்த்த உணவுகள், அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் தவிர்க்கப்  படவேண்டும்.

 பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அவை கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக அளவு உப்பும் கொழுப்பும் சேர்க்கப்படுகின்றன. எனவே அவை இதய நோயை உருவாக்கும். பாக்கெட் உணவுகள் செயற்கை பதப்படுத்திகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். அவை இதய நோயை உருவாக்குவதற்கு காரணிகளாக உள்ளன.

     பதப்படுத்தப்பட்ட மற்றும் ரீபைன்ட் கார்போஹைட்ரேட் உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்து, நம் உடலில் கொழுப்பை அதிகரித்து இதயத் தமனிகளில் அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்குவதால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. அதிக உப்பு சேர்த்த உணவை உண்பதால் ரத்த கொதிப்பு உயர் ரத்த அழுத்த நோய் உருவாகி அவை இதயத்தை பாதிப்படைய செய்கின்றன.

நல்ல உறக்கம் 

 நல்ல உறக்கம் ஒருவருக்கு மிகவும் முக்கியமானது.  சரியான தூக்கமின்மையால் இதய ஆரோக்கியம் பாதிப்படையலாம். ஒருவர் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் உறங்குவது அவசியம். அது கட்டாயமாக இரவு உறக்கமாகத்தான் இருக்க வேண்டும். பகலில் உறங்குவது இதில் கணக்கில் வராது. பகலில் அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ மட்டுமே தூங்கலாம். நீண்ட நேர பகல் தூக்கம் இரவு தூக்கத்தை பாதிக்கும். நல்ல ஆரோக்கியமாக உறங்கும் ஒருவரின் இதய ஆரோக்கியம் சீராக இருக்கும்

 மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவை இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மது அருந்துவதை ஆரோக்கியத்தை பாதுகாக்க மது அருந்துவதையும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும் 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழ்காணும் வழிகளை  செயல்படுத்துங்கள் 

  •  சரிவிகித உணவை உண்ணுங்கள் 
  • நன்றாக உறங்குங்கள் 
  • மன உளைச்சலை கட்டுப்படுத்துங்கள் 
  • தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்



No comments:

Post a Comment

Breathe Easy: Foods That Boost Lung Health and Cleanse Your Lungs

Breathe Easy: Foods That Boost Lung Health and Cleanse Your Lungs      In today's world, where air pollution is a growing concern, maint...